Analytics

May 22, 2026

அவன்


 ”ஹாய், என் பேர் சூர்யா”

முதல் சந்திப்பின் கை குலுக்கலில் 

உன் விரல்களை அறிந்தேன்


”வீட்டில் கொண்டு விடுறேன் வா”

பைக் ஏறி உட்காருகையில்

உன் தோள்களை அறிந்தேன் 


”எப்போ பார்க்க போறோம்”

விடைபெறும் தழுவலில்

உன் முதுகை முழுதாய் அறிந்தேன் 


"இன்னுமா புரியல? ”

முதல் முத்த ஸ்பரிசத்தில் 

உன் அதரங்கள் அறிந்தேன்


"இப்படியே இருக்கணும் "

என் மடியில் உன் தலை கோதி 

உன் கேசக்கால்கள் அறிந்தேன் 


”நான் தூக்கிக்கறேன் வா”

என் வலியை நீ சுமக்க

உன் நெஞ்சை அறிந்தேன் 


”அவ்வளவு எல்லாம் வலிக்கல”

நீ தட்டி கழித்தும் நான் நீவி விட

உன் பாதங்களை அறிந்தேன் 


"கொஞ்சம் பொறுத்துக்கோ டா"

எனக்காக உதிரும் கண்ணீர் துடைத்து

உன் கன்னங்களை அறிந்தேன் 


" உன்ன மாதிரியே இருக்கா "

பெருமையான தந்தை உன் 

அன்பின் ஆழம் அறிந்தேன்


"..... "

எனக்கான மௌன மொழி பேசும் 

உன் கண்ணில் அதீத காதல் தவிர

வேறு என்ன அறிவேன்? 

No comments: